Total Pageviews

Monday, April 18, 2016

மதுரை கப்பலூர் தோப்பூர்- அரசு ஆ(ஹா)ஸ்பத்திரி!

அரசு மருத்துவமனையை அழகு மருத்துவ மனையாக மாற்றிக் காட்டிய காந்திமதி நாதன்!

குப்பையில்லை... குமட்டலில்லை... ஒரு அரசு ஆஸ்பத்திரி!

''சார், தோப்பூரில் உள்ள மருத்துவமனையை கண்டிப்பாக ஒருமுறை வந்து பார்க்க வேண்டும்'' என்று வாசகர் ஒருவர் அழைக்க, அப்படியென்ன அந்த மருத்துவமனையில் இருக்கு? என்று நமக்கும் ஆவல் அதிகமாகவே, நேரில் பார்க்க கிளம்பினோம்.

மதுரை கப்பலூர் அருகே, தோப்பூர் ஊராட்சியில் வறண்ட நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது அந்த மருத்துவமனை. வளாகத்துக்குள் நுழைந்ததும் கொடைக்கானலுக்குள் வந்து விட்டோமா என்று நினைக்கும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் மரம், செடி, கொடிகள்.

நோயாளிகள், சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீண்டுசெல்லும் தார்சாலைக்கு இரு பக்கமும் மருத்துவமனை கட்டடங்கள் அழுக்கில்லாமல், காரைபெயராமல், துடைத்து கவிழ்த்தது போல பளிச்சென்று இருக்கிறது. மருத்துவமனையின் முக்கிய கட்டடம் முன்பு விரிந்து கிடக்கும் பசுமை போர்த்திய புல்வெளியில், பறவைகள் அமர்ந்து நீர் அருந்துகின்றன.

மருத்துமனையின் நிர்வாக அலுவலகத்தின் முன், நட்சத்திர ஹோட்டலைப்போல் வண்ண வண்ணக் கொடி கள் பறக்கின்றன. மருந்துமனைகளுக்கே உரிய பினாயில், டெட்டால், ஸ்பிரிட் வாடையைக் காணோம். கட் டடத்தின் நுழைவுப்பகுதியில், ஒருபக்கம் நோயாளிகள் கேரம்போர்டும், தாயமும் விளையாடிக் கொண்டி ருக்கிறார்கள். இன்னொரு விசாலமான அறையில் அன்றைய நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்ப் எங்கும் பழைய, புதிய இலக்கிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மு.வ. முதல் எஸ்.ரா வரைக்கும் அடுக்குகளில் சிரிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பளிச் பளிச்.!

ஒவ்வொரு வார்டிலும் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற நேரங்களில் தன்னம்பிக்கையூட்டும் பாடல்கள் சன்னமாக ஸ்பீக்கரில் ஒலிக்கிறது. இதை ஒரு பண்பலை வானொலி நிலையத்தினர் இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்து கொடுத்திருக்கிறார்களாம். சுகாதாரமான முறையில் மாடர்ன் கிச்சனில் இவர்களுக்கான உணவு தயாரிக்கப்படுகிறது. உணவு நேரத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சாப்பாடு அவர்களை தேடி வருகிறது. நோயாளிகளுக்கு காம்ப்ளான், ஹார்லிக்ஸ் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மருத்துவமனை அருகில் இரண்டு மைதானங்கள் உள்ளன. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்படி நிறைய.... இவையெல்லாம் நட்சத்திர ஓட்டலை போல செயல்படும் தனியார் மருத்துவமனையில் பார்த்தது அல்ல. தோப்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில்தான். அதிலும்... எலும்புருக்கி நோய் என்று அருவெறுப்பாக சொல்லப்படும் காசநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் செயல்பட்டுவரும் காசநோய் மருத்துவமனைகளை காட்டாஸ்பத்திரி என்றுதான் மக்கள் பொதுவாக சொல்வார்கள். அந்த காலத்தில் அது மோசமான தொற்று நோய் என்பதாலும், நோய் வந்தவர்களுக்கு விரைவில் மரணம் வந்து விடும் என்ற அறியாமை மற்றும் அச்சத்தாலும், பொதுமக்கள், காசநோய் மருத்துவமனை வாசல் பக்கம் வரவே பயந்தார்கள்.

உறவினர்களுக்கு காசநோய் வந்துவிட்டால், மருத்துவமனையில் அநாதையாக போட்டுவிட்டு ஓடிவிடு வார்கள். அதனால்தான், அப்போதைய அரசாங்கம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலையடிவாரத்திலும், அடர்ந்த வனப்பகுதியிலும் காசநோய் மருத்துவமனையை உருவாக்கினார்கள். ஊரைவிட்டு ஒதுங்கியிருந்த தால் காட்டாஸ்பத்திரி என்ற பெயர் தானாகவே வந்துவிட்டது. அப்படி 1960ல், 110 ஏக்கரில் மதுரை வட்டார மக்களுக்காக உருவானதுதான் இந்த மருத்துவமனை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆரம்ப நிலையில் வரும் காசநோயாளிகளில், தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களையும், நோய் முற்றியவர்களையும் இங்கே அனுப்பி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை இருந்த கோலத்தை பார்த்து, 'இறந்தாலும் பரவாயில்லை, இந்த ஆஸ்பத்திரியில் இருக்கமாட்டேன்' என்று நோயாளிகள் ஓடி விடுவார்களாம். ஆனால், இப்போதோ குணம் ஆனா லும் கண்டிப்பா டிஸ்சார்ஜ் ஆகணுமா என்று, ஏக்கத்துடன் நோயாளிகள் கேட்கும் வகையில் நிலைமை மாறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த மருத்துவமனை எப்படி இருந்தது? என்று அந்த ஊர்க்கார் களிடம் கேட்டால், ''இந்த பக்கமே யாரும் வர மாட்டார்கள், இங்கு அட்மிட்டாகும் நோயாளிகள் நோய் முற்றி போவார்கள். சிலர் தற்கொலைக்கெல்லாம் முயன்றிருக்கிறார்கள். அதற்கு காரணம், ஆதரவற்று இங்கு வந்து கிடப்பவர்களுக்கு இருக்கிற சூழ்நிலையாவது கொஞ்சம் நிம்மதியை தரணும். இந்த ஆஸ்பத்திரியே பொண்க்கொட்டகை மாதிரி இருக்கும். அவ்வளவு மோசமா இருந்த இந்த ஆஸ்பத்திரியை ரெண்டு வருஷத்துக்கு முன்னால டாக்டரா வந்த காந்திமதிநாதன்தான் சோலைவனமாக்குனாரு.’’ என்று பெருமிதப்பட்டார்கள்.

மருத்துவமனையின் பழைய போட்டோக்களை தற்போதுள்ள அமைப்புடன் ஒப்பிட்டுப்பார்த்தால் ஆச்சரி யம் ஏற்பட்டது. தற்போது ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வாங்கும் அளவுக்கு தயாராக உள்ளது.

கிராமங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையே நீட்டாக வைத்திருக்க முடியாத சூழல் நிலவும் போது, எப்படி இது சாத்தியமாயிற்று என்று தலைமை மருத்துவர் காந்திமதிநாதனிடம் கேட்டோம்.

'இங்கு ஐந்து டாக்டர்கள், நர்சுகளுடன் சேர்த்து 56 ஊழியர்கள் இருக்கிறார்கள். மதுரை ஜி.ஹெச்சில் வேலை பார்த்த என்னை ஆர்.எம்.ஓ.வாக இங்கு மாற்றினர். சேர்ந்தபின் மருத்துவமனை இருந்த நிலையை பார்த்து, பனிஷ்மென்ட் கொடுத்துட்டாங்கனு நெனைச்சேன். பாழடைந்த கட்டடம் போல, எங்க பார்த்தாலும் முள்ளுக்காடு, புதர், மேடு பள்ளமுமாக கரடுமுரடாக இருந்தது.

நோயாளிகளும் ஒரு கண்டிப்பும் இல்லாமல் இஷ்டத்துக்கு வருவார்கள், போவார்கள், சமூக விரோதிகள் பலர் இதை தங்கள் நிரந்தர வீடாகவே பயன்படுத்திவந்தனர். நோயாளிகளும் தங்களுக்கு வியாதி குண மாகாது என்ற விரக்தி மனநிலையிலேயே இருந்தார்கள். கட்டடங்களும் நோயாளிகளை விட மோசமாக இருந்தன. இதைப்பார்த்துவிட்டு இங்கிருந்து போய்விட வேண்டுமென்றுதான் நினைத்தேன்.

ஆனால் நண்பர்கள் சிலர், 'உனக்கு பிடிக்கவில்லையென்பதால் கிளம்பிவிடாதே. இங்குள்ளவர்களை சிகிச்சை அளித்து அவர்களை சராசரி மனிதர்களாக மாற்ற கடவுள் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக் கிறார். அந்த மருத்துவமனையை நல்ல நிலையில் கொண்டு வர உன்னால் முடியும்' என்றனர். ஒரு நண்பர், ஐயாயிரம் ரூபாயை கொடுத்து, 'இதிலிருந்து அந்த மருத்துவமனைக்கு தேவையானதை வாங்கிக்கொள், மற்ற தேவைகளுக்கு அரசாஙகத்தை மட்டுமே எதிர்பார்த்திருக்காமல் தெரிந்த நண்பர்களிடம் உதவி கேள், கண்டிப்பாக செய்வார்கள்' என்றார்.

அதைக் கேட்டதும் எனக்கும் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. வழக்கமான டாக்டராக வாழ்ந்து என்ன பயன்? சமூகத்துக்கு நாமும் ஏதாவது செய்வோம் என்று அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன்.

முதற்கட்டமாக மருத்துவமனையின் புதர்களையும், மேடு பள்ளங்களையும் அருகிலிருக்கும் ஒரு கல்லுாரி மாணவர்களின் உதவியோடு சுத்தம் செய்தோம். மருத்துவமனையின் அத்தனை வார்டுகளையும் வெள் ளையடித்தோம். தெரிந்த நண்பர்கள் மற்றும் அவர்களது நண்பர்களான பிசினஸ்மேன்களிடம் மருத்துவ மனைக்கு தேவையான சிலவற்றை கேட்டு வாங்கினோம். கப்பலூர் எக்ஸ்போர்ட் நிறுவனம் நான்கு லட்ச ரூபாய் செலவில் தண்ணீருக்காக ஆர்வோபிளான்ட் வைத்து கொடுத்தார்கள்.

வனத்துறையினர் செடிகளையும், கன்றுகளையும் கொடுத்தார்கள். இருக்கிற மரங்கள் போக இரண்டாயி ரத்து ஐநூறு செடிகள் நட்டு பராமரித்து வருகிறோம். அடுத்து மிச்சமிருக்கிற நிலத்தில் பயிர், காய்கறிகள், பூக்கள் உறபத்தி செய்யலாமென்று இருக்கிறோம். மருத்துவமனையின் சுற்றுப்புறமும், அமைப்பும் மாறி யதில் இயல்பாகவே மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் உற்சாகமாகி இன்னும் கூடுதலாக நோயாளி களுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர். முறைப்படுத்தி நோய்களுக்கான ட்ரீட்மென்ட் கொடுத்து வருகிறோம்.

கவலைதான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய நோய். காசநோயாளிகள் சிகிச்சை நேரம் போக மற்ற நேரங்களில் தங்களை இயல்பாக உணரவேண்டும் என்ற நோக்கத்துடன் டிவி, ரேடியோ, நுலகம், விளையாட்டுகள் என்று ஈடுபடுத்தினோம். அவ்வப்போது அவர்கள் குடும்பத்தினரை அழைத்து விழா நடத்துகிறோம், நல்ல மதிப்பெண்கள் எடுத்த அவர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் கொடுத்து உறசாகப்படுத்தினோம்.

நல்ல சூழல், தொடர்ச்சியான வைத்தியம், பாசிடிவான மனநிலை இருந்தால் மனிதனுக்கு வரும் எவ்வளவு பெரிய வியாதியும் பறந்தோடிவிடும். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இம்மருத்துவமனைக்கு ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற முயற்சித்து வருகிறோம். இனி இதை யாரும் காட்டாஸ்பத்திரினு சொல்ல மாட்டாங்கள்ல." என்றார் அமைதியாக.

அரசு மருத்துவமனையை அழகு மருத்துவமனையாக மாற்றிக்காட்டிய காந்திமதிநாதனுக்கு பாராட்டை தெரிவித்துவிட்டு வெளியேறினோம்-
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்.

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...